
Page 1 of 4
3. மனம் விரும்புதே உன்னை...

வழக்கம் போல் இந்து அன்றும் காலையிலே எழுந்து வழக்கமான யோகாவும் நடை பயிற்ச்சியும் முடித்து விட்டு, சமையல்கார கனகா கொடுத்த பாலை வாங்கி கொண்டு பால்கனியில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள். அங்கிருந்து பார்த்தால் அவர்களின் அழகிய தோட்டம் தெரியும். காலை வேலை என்பதால் சூரிய உதயத்தில் நிறம் மாறும் வானத்தையும் காண முடியும். இந்துவிற்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் இந்த நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தையும் மேகங்களின் எழிலையும் ரசிப்பது. அவள் இப்போது தங்களின் நிறுவனத்தை நிர்வகிப்பதால் முன்பு போல் ரசனைக்கு தனியாக நேரம் செலவிட முடிவதில்லை. அனால் காலையில் ஒரு அரை மணி நேரமாவது, இந்த இடத்தில செலவு செய்யாமல் அவள் இருந்ததில்லை. காலையில் விழிப்பது என்பது அவள் பெற்றோர் அவளுக்கு சிறு வயது முதலே பழக்கமாக்கி இருந்த ஒரு விஷயம். அதனால், காலையில் அரை மணி நேரம் அமைதியாக அமர்ந்திருக்க செலவிடுவது என்பது அவளுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. சில சமயம் அவள் அன்னையும் அவளுடன் கலந்து கொள்வது உண்டு. இன்று அன்னை இன்னும் விழிக்கவில்லை என்பது அவள் பால்கனி வரும் போது மூடி இருந்த அன்னையின் அறையின் மூலம் புரிந்தது. முன்பு அவள் தந்தை சரவணன் இருந்த போது இருந்த கலகலப்பு அன்னையின் முகத்தில் தற்போது இல்லை என்பது அவளுக்கு தெரியும். தந்தையின் நினைவு வந்த உடன் அவள் மனம் கலங்கியது.
இந்துவின் அன்னை, அர்ச்சனாவின் குடும்பத்தினர், பலவிதமான வியாபாரங்களில் ஈடு பட்டிருந்தனர். ஆனால் அவளின் தந்தை சரவணின் குடும்பம் மத்திய தர வகுப்பை சார்ந்தது. பொதுவாக, ஆபிஸ் உத்தியோகம் பார்ப்பதையே அவரின் குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் சரவணன் மட்டும் அவர்களில் இருந்து வேறுப்பட்டு தானாக தொழில் தொடங்க விரும்பினார். திருமணமாகிய பின் அவர் தொடங்கிய நிறுவனம் தான் 'எஸ் எ கம்பெனீஸ்'. 'எஸ் எ கம்பெனீஸ்' சில்லறை வர்த்தகத்தில் (retail) புகழ் பெற்று விளங்கியது. எதிர்பாராத விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் சரவணன் ஒரு சாலை விபத்தில் இறந்த பின் இந்து எஸ் எ கம்பெனிஸ்-ன் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டாள். குடும்ப வர்த்தகமான அந்த நிறுவனத்தின் பங்குகள் நான்காக பிரிக்க பட்டு இருந்தன. சரவணன், அர்ச்சனா, இந்து மற்றும் இந்துவின் அத்தை சரவணனின் தமக்கை கல்பனா 25% பங்குகள் வைத்திருந்தனர். சரவணனின் மறைவுக்கு பின், அவரின் பங்குகள், அர்ச்சனாவிற்கு சென்றன. எனவே இந்து அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தாலும் கூட, பொதுவாக தன அன்னையின் விருப்பதிற்கேற்றவாரே முடிவுகளை எடுத்து வந்தாள்.
சரவணின் எதிர்பாராத மறைவு மனைவி மகள் இருவரையுமே மிகவும் பாதித்திருந்தது. அந்த குடும்பத்தின் ஆணிவேராக இருந்து அனைத்தையும் செய்து வந்த சரவணனை இழந்த பின் இருவரும் தன்னிலைக்கு வரவே சில மாதங்கள் ஆகின. இந்துவிற்கு தன் அன்னையை நினைத்து பெரிதும் கவலையாக இருந்தது. தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்து அவள் கணவனுடன் சென்று விட்டால் அவள் அன்னையை யார் கவனிப்பது? இப்பொழுதெல்லாம் அவளுக்கு தான் ஆணாக பிறந்திருக்க கூடாதா என்று ஆதங்கமாக இருந்தது.
அர்ச்சனா அந்த காலத்திலேயே பொறியியல் பட்டம் பெற்றவர். திருமணத்திற்கு முன் தன் குடும்பத்தினரை போல் தானும் ஏதேனும் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தவர் தான். அனால் திருமணதிற்கு பின் அர்ச்சனா தன் கணவன் சரவணின் வளர்ச்சிக்கு உதவவே விரும்பினார். இதில் அவள் தாத்தாவிற்கு மிகுந்த வருத்தம் என்பதை இந்து அறிந்தே இருந்தாள். ஆயினும் தன் மனைவின் சொத்தை எதிர்பாராமல், தன் முயற்சியால் வெற்றி பெற்ற மருமகனை எண்ணியும் அவருக்கு பெருமை தான். அதனால் தான் தன் வியாபாரங்களின் முக்கியமானவற்றை தன் இரு மகன்களுக்கு கொடுத்தவர், இரு சிறிய துணை நிறுவனங்களை தன் மகளுக்கு கொடுத்தார். அவர் மறைவுக்கு பின் பிற்காலத்தில் பிரச்சனை வராது இருக்க அவளின் இரு மாமன்களும், அந்த துணை நிறுவனங்களை, தனி நிறுவனமாக மாற்றி அர்ச்சனாவிற்கே கொடுத்து விட்டனர். ஆயினும் அர்ச்சனா ஒரு பங்குதாரராய் இருந்து அதை மேற்பார்வை பார்த்தாரே அல்லாது, தனியாக ஆர்வம் எதுவும் காட்டவில்லை. அனால் சரவணனின் மறைவுக்கு பின் அர்ச்சனா தினமும் அலுவலகம் சென்று அந்த நிறுவனங்களை நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார். தந்தையின் நினைவுகளில் இருந்து மீண்டு வரவே அன்னை முயற்சிக்கிறார் என்பதை அறிந்திருந்ததால், இந்துவும் எதுவும் சொன்னதில்லை.
கீதாவிற்கும் அர்ச்சனாவை மிகவும் பிடிக்கும். அர்ச்சனாவிற்கும் கீதா மீது தனி பிரியம் உண்டு. அதனால் தான் கீதா ராஜீவின் காதல் விஷயம் அறிந்து, அதற்க்கு சம்மதிக்க மறுத்த காஞ்சனாவிடம் பேசி அவர்கள் திருமணம் நடக்க வழி வகுத்தார். அதில் இந்துவிற்கு சந்தோஷம் என்றாலும், கீதா தன காதல் கை கூட விட்டுக் கொடுத்தவற்றை எண்ணி அவளுக்கு வருத்தம் தான். இந்த நினைவு வந்த உடன் நேற்று நடந்த நிகழ்சிகள் நினைவில் வந்தன.
வீணாவின் பேச்சை நினைத்து சிரிப்பு வந்தது. உண்மையில் வீணா வீட்டிற்க்கு சென்று இருந்த போது அவள் மனதில் இருந்தது வேறு. சஞ்சீவை யார் என்ன என்று சரியாக கேட்காமல் 10 - 15 நிமிடங்கள் பேசியது அவளை வெட்கப்பட வைத்தது. எஸ் எ நிறுவனம் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இது போல் நடந்து கொண்டதை நினைத்து அவளுக்கு அசிங்கமாக இருந்தது. அதை சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் தான் அவள் நந்தினியின் பேச்சை எடுத்ததே. அவள் மனம் இப்பொழுது வீணாவிடம் இருந்து நந்தினியிடம் தாவியது.
நந்தினியும் இவர்களின் கல்லூரியில் படித்தவள் தான். கீதாவின் சக வகுப்பு மாணவியான நந்தினியுடன் தொடக்கத்தில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. நந்தினி இந்துவிடம் தானாகவே வந்து நன்றாக பேசுவாள். இப்போது முழுதாக நினைவில்லாத போதும், கல்லூரியில் ஏற்பட்ட எதோ ஒரு சிறு பிரச்னை தான் நந்தினியை இந்துவை எதிரியாக பாவிக்க வைத்தது. முதலில் சீனியர் என்றும், எல்லாம் மாறி விடும் என்று பொறுமையாக இருந்த இந்து ஒரு நிலைக்கு பின் தானும் நந்தினுக்கு திருப்பி பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள். நந்தினியும் இந்துவும் ஜென்ம விரோதிகள் என்பது கல்லூரி மாணவர்கள் முதல் ஆசிரியர் வரை அனைவரும் அறிந்ததே. இருவரும் படிப்பிலும் அதே போல் கெட்டியாக இருந்ததால், அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. எதையும் அன்னையிடம் மறைத்து வழக்கம் இல்லாததால், வழக்கம் போல் அன்னையிடம் இதை சொன்ன போது, நந்தினியை பற்றி பல கேள்விகளை கேட்ட பின், முதல் முறையாக அர்ச்சனா தன் மகள் எதிர்பார்க்காத ஒன்றை அவளிடம் சொன்னார். இந்து நந்தினிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்... இப்போது நினைத்தாலும் அவளுக்கு கோபமாக வந்தது.. இப்போது இதை பற்றி நினைக்க வேண்டாம்... மனதை கட்டு படுத்தி வேறு பக்கம் திருப்பினாள்..
வீணாவின் கிண்டல் நினைவில் வந்தது. வீணாவை பொறுத்த வரை எல்லாம் சாதாரண விஷயங்கள் தான். பார்த்த உடன் காதல் வர காதல் என்ன கடையில் விற்கும் கத்தரிக்காயா அல்லது முருங்கைக் காயா? உண்மையில் அவள் சஞ்சீவை முழுதாக பார்க்க கூட இல்லை. தன் தவறை எண்ணி அந்த கலக்கத்திலேயே இருந்து விட்டாள். ஆனாலும் மாலையில் சஞ்சீவிடம் அப்படி நடந்திருக்க கூடாது. அவனுக்கு எப்படி வீணா கிண்டல் செய்ததும் தன் மனதில் இருந்த கலக்கமும் தெரியும்? ஒரு நன்றி சொல்லி இருக்கலாம். அவன் என்ன நினைத்திருப்பான்? அடுத்த முறை அவனை பார்க்கும் போது மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அவனை எங்கே பார்ப்பது...
"குட் மார்னிங் செல்லம்..."
- Prev
- Next >>


